கணவன் மனைவி உறவு பற்றிய தகவல்!
திருமணத்தின் மூலம் நீங்கள் வெறும் மனைவியை மட்டும் பெறுவதில்லை. அன்றிலிருந்து உங்கள் வாழ்வின் இறுதிவரை அனைத்திலும் அவள்தான் உங்கள் வாழ்க்கைத் துணைவி! இல்லத்தரசி! பங்காளி! வாழ்வின் நீண்ட பயணத்தின் வழித்துணை! எதிலும் எஃகு போன்று நின்று அரவணைத்து நிற்பவள்! நீங்கள் ஏற்றம் பெற உற்ற தோழியாய் நிழலாய் வலம் வருபவள்! .
அன்று முதல் அவள்தான் உங்களுடைய ஒவ்வொரு நொடியையும், நாளையும், வருடத்தையும், சுகத்தையும், சுவையையும், துக்கத்தையும், கனவையும், நனவையும மகிழ்வையும், கவலையையும் உங்களுடன் பகிர்ந்து கொள்ளப் போகிறவள்.
நீங்கள் நோயுறும்போது, அவள் உங்களை மிகுந்த அக்கறையுடன் கவனித்துக் கொள்வாள். உங்களுக்கு ஏதேனும் தேவை என்றாலும் ஓடோடி வருபவளும் அவள்தான்.
உங்களுடைய ரகசியங்களை அவள் பாதுகாப்பாள். உங்களுக்கு ஆலோசனைகள் தேவைப்படும்போது அவள்தான் உங்கள் முக்கிய மந்திரி.
உங்கள் மனைவிதான் உங்களுடன் எப்போதும் உடன் இருப்பவள். காலையில் நீங்கள் கண் விழிக்கும்போது உங்கள் கண்கள் பார்க்கும் முதல் காட்சி அவளுடைய கண்களாகத்தான் இருக்கும். அன்றைய தினம் முழுவதும் அவள் உங்களுடன் இருப்பாள்.
சில சந்தர்ப்பங்களில் உடலால் உங்களருகில் அவள் இருக்க முடியாமல் போகும்போது அவளது நினைவுகள் உங்களை சூழ்ந்திருக்கும். காரணம் அவளது ஆன்மா, மனம், இதயம் மூன்றும் இறைவனிடம் உங்களுக்காக பிரார்த்தித்துக் கொண்டிருக்கும்.
ஒவ்வொரு நாளின் முடிவில் நீங்கள் படுக்கைக்கு போகுமுன் நீங்கள் கடைசியாகப் பார்ப்பது அவளது கண்களாகத்தான் இருக்கும். உறங்கிய பிறகும் உங்கள் கனவிலும் அவள் வலம் வருவாள். சுருக்கமாகச் சொன்னால் அவள் தான் உங்கள் உலகம்! நீங்கள்தான் அவளது உலகம்!
கணவன் மனைவி உறவைப்பற்றி குர்ஆனை விட சிறப்பாக யார் தான் கூறிவிட முடியும்? அந்த உறவின் இனிமையைப் பற்றி, அது இருக்க வேண்டிய நெருக்கத்தைப்பற்றி பேரறிவாளன் அல்லாஹ்வின் வர்ணனைகளை பாருங்களேன்!
هُنَّ لِبَاسٌ لَّكُمْ وَأَنتُمْ لِبَاسٌ لَّهُن
‘அவர்கள் உங்களுக்கு ஆடைகளைப் போன்றவர்கள், நீங்கள் அவர்களுக்கு ஆடைகளைப் போன்றவர்கள் (ஸூரா அல்-பகரா 2:187).
Comments
Post a Comment